புதிய அரசியலமைப்பு தொடர்பில் மூவின இளைஞர், யுவதிகள் எடுத்துள்ள முடிவு

Tamil Win, 26 June 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடு பூராகவும் விழிப்புணர்வூட்ட முடிவெடுத்துள்ள மூவின இளைஞர், யுவதிகளும் அதற்கான செயற்பாட்டில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளால் கடந்த 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘மக்கள் ஆட்சிக்கான அரசியல் யாப்பு’ என்னும் தொனிப்பொருளிலான இந்த செயற்திட்டத்தின் கீழ் 1250 விழிப்புணர்வு கூட்டங்களை கிராம மட்டத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

கடந்த கால அரசியல் யாப்புக்களில் உள்ள குறைபாடே தமிழ் மக்களை போராட வேண்டிய நிலைக்கு தள்ளியது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக கொண்டு வருவதாக கூறப்படும் புதிய அரசியலமைப்பில், இனப்பிரச்சினையை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, மூவின மக்களும் இன, மத, பேதமின்றி ஐக்கியமாக வாழ வழி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த விழிப்புணர்வு நடைபெற்று வருகின்றது.

இதில் மூவின இளைஞர், யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.