மடு பிரதேச செயலக பிரிவில் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பின் வசம்!

23 March 2017, Samakalam

மடு பிரதேச செயலக பிரிவில் 48 ஏக்கர் காணி பாதுகாப்பு தரப்பிடம் உள்ளதாக மடு பிரதேச செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் தளமாக கொண்டு இயங்கும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பு குறித்த பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணி விபரங்களை தகவல் அறியும் சட்டம் மூலம் விண்ணப்பித்திருந்தது. அதற்கு குறித்த பிரதேச செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே மேற்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மன்னார், மடு பிரதேச செயலக பிரிவில் இராணுவம் மற்றும் பொலிஸ் ஆகிய பாதுகாப்பு தரப்பினரே 48 ஏக்கர் காணியை கையகப்படுத்தி வைத்துள்ளனர். இதன்படி தம்பனைக்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 1 ஏக்கர் காணி இராணுவத்தாலும், பரசன்குளம், தட்சணாமருதமடு, தம்பனைக்குளம், பன்னவெட்டுவான், மடுவீதி ஆகிய இடங்களில் அரச காணிகள் 27 ஏக்கரை இராணுவமும், தம்பனைக்குளம் மற்றும் மடு வீதி ஆகியவற்றில் 6 ஏக்கர் அரச காணியை பொலிசாரும் கையகப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், சின்னப்பண்டிவிரிச்சான், தட்சணாமருதமடு, கீரிசுட்டான் ஆகிய பகுதிகளில் வனஇலாகாவிற்கு சொந்தமான 14 ஏக்கர் காணியை இராணுவமும் சுவீகரித்து வைத்துள்ளது. இவ்வாறாக மடு பிரதேச செயலக பிரிவில் 48 ஏக்கர் காணி பாதுகப்பு தரப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளது.