மட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Karaitivu Rep, 2 July 2017

துறையூர் தாஸன்:கடந்த கால ஜனாதிபதி தேர்தல்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது, ஜனாதிபதி தேர்தல் முறையால் நாங்கள் பாதிக்கப்பட்டது தான் அதிகம் சிறுபான்மையினரான நாங்கள் தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்திருக்கின்றோம் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு நடவடிக்கைகள் வரையப்பட்டுக்கொண்டிருக்கும் போது,அன்புக்கும் நட்புக்குமான AFRIEL அமைப்பானது இலங்கை முழுவதும் மக்களை விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்லும் வகையில் செயற்பட்டு வரும் வேளையில்,அமைப்பின் திட்ட இணைப்பாளர் சி.பிரதீப் மற்றும் அமைப்பின் கிழக்கு மாகாண இளைஞர் பிரதிநிதிகள் இணைந்து மட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனுடன் புதிய அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடலை அவரது அலுவலகத்தில் (30.06.2017 ) மேற்க்கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,கடந்த கால ஒவ்வொரு ஜனாதிபதியையும் சிறுபான்மை மக்களே தேர்ந்தேடுத்துள்ளனர்.ஜனாதிபதி தேர்தல் முறை சிறுபான்மை தமிழ் மக்களை பாதுகாக்கவில்லை என்றுதான் கூற வேண்டும்.

புதிய ஆட்சி மாற்றத்தின் மூலமாக பிரதான இரு கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளன.இந்த பயணத்தில் சிறுபான்மை,சிறிய கட்சிகளும் சிவில் அமைப்புகளும் இணைந்து அங்கம் வகித்துள்ளன. புதிய அரசியலமைப்பு,சகலரதும் பங்களிப்பை உள்வாங்கி செயற்படுவதனுடன் விரைவில் அரசியலமைப்பின் இறுதித் திட்ட வரைபு வரவுள்ளது.

மீளப்பெற்றெடுக்கப்பட முடியாத அரசியல் அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கான அதிகாரங்களும் தேர்தல் முறையிலுமான மாற்றமும் சமஸ்டியினை ஒத்த தீர்வு தமிழ் மக்களுக்கு கிடைக்கவுள்ளதுடன், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களும் சிறுபான்மை மக்களுக்கான அதிகாரங்களும் புதிய அரசியல் யாப்பில் உள்வாங்கப்பட இருக்கின்றன.

சமஸ்டி முறையிலான உச்சபட்ச தீர்வுக்கு முயற்சிப்பதனுடன் பிரிக்கப்பட முடியாத தேசமாக தமிழ் மக்களுக்கு இருக்கப் போகிறது. மிகவும் தகுதியானதும் தரமானதுமான புதிய அரசியலமைப்பில் மக்களின் உரிமைகள்,சுதந்திரம்,அரசியல் நகர்வுகள்,அதிகாரங்கள் ஆகியவை முறையாக பேணப்படும் என்றார்.