வடக்கு இளைஞர், யுவதிகளுக்கு உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் செயலமர்வு

Samakalam, 23 December 2016

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற இளைஞர், யுவதிகளுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை, வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார நிதி கையாளுகை மற்றும் புதிய தேர்தல் முறை தொடர்பாகவும் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு, தேசிய சாமாதான பேரவை அலுவலகத்தில் புதன்கிழமை இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதில் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராட்சி, தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜொகான் பெரேரா ஆகியோர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 30 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்ட இந்தக் கலந்துரையாடலில் சமகாலப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதேவேளை, வடக்கில் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் முறை தொடர்பாகவும், ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கும் இத் தேர்தல் முறை தொடர்பாகவும் அவற்றை கண்காணித்தல் தொடர்பாகவும் அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பினால் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.