வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் இளைஞர்களால் முற்றுகை

Samakalam, 26 January 2017

வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகம் வவுனியா மாவட்ட இளைஞர், யுவதிகளால் இன்று முற்றுகையிடப்பட்டது.

வவுனியா மாவட்ட இளைஞர்கள் 50 பேர் வரையில் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு சென்று காணாமல் போனவர்கள் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் முடிவு என்ன என அவ் அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

வவுனியாவில் நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அவர்கள் மனித உரிமை ஆணைக்குழு ஆகிய உங்களிடமும் முறைப்பாடு செய்துள்ளார்கள். அவர்களது முறைப்பாட்டுக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். அதற்கான தீர்வு என்ன..? ஆதாரத்துடன் காணாமல் போனமை தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டன. அவற்றை கண்டுபிடித்தீர்களா என கேள்வி எழுப்பினர்.

இதன்போது வவுனியா மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இவை தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அவை எவ்வாறு உள்ளன என உடனடியாக தரமுடியாது. இது ஒரு பெரிய விடயம். அதனால் எமது அமைப்பு மக்களுக்காக அதனை கையாண்டு வருகிறது. தங்களுக்கு தேவையான விடயங்களை எழுத்து மூலம் வழங்கினால் எமது கொழும்பு அலுவலகத்தின் அனுமதியுடன் அவை பற்றிய தகவல்களை வழங்கமுடியும். அதற்கு காலஅவகாசம் தேவை எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து இரு பகுதியினருக்கும் இடையில் கடும் வாய்தர்க்கம் ஏற்பட்டது. இருப்பினும் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டதற்கு இணங்க கால அவகாசத்தை வழங்கிய இளைஞர்கள் பின்னர் அங்கிருந்து அமைதியாக சென்றனர்.